கொப்பம்பட்டியில் 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
தூத்துக்குடியில் புகாருக்கு உள்ளான கொப்பம்பட்டி போலீசார் 3 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி:
கோவில்பட்டி அருகே கள் இறக்கி விற்க தொழிலாளி ஒருவர் லஞ்சம் கொடுத்ததாக கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவுவது தொடர்பாக 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
கள் விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதற்காக பனை தொழிலாளி ஒருவர், போலீசாருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர் கூறும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இதையடுத்து இதுதொடர்பாக கொப்பம்பட்டி போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டி, தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்குமார், போலீஸ்காரர் ஸ்ரீராம் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பிறப்பித்து உள்ளார்.