ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கவரைப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டு இருந்த சந்தேகத்திற்கு இடமான 2 மினி லோடு வேன்களை மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்த முயன்ற 4 டன் எடை கொண்ட 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வேன் டிரைவர்களான தமின் அன்சாரி (வயது 46) மற்றும் அப்துல் ரகுமான் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.