மீஞ்சூர் அருகே ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து
மீஞ்சூர் அருகே ஓட்டல் உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கத்திக்குத்து
மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு காலனியில் உள்ள கலைஞர் தெருவில் வசிப்பவர் வீரராகவன்(வயது 62). இவர் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே ஓட்டல் நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
வழுதிகைமேடு ஏரிக்கரையின் வழியாக செல்லும்போது ஆட்டோவில் வந்த 5 பேர் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குத்தினர்.
வலைவீச்சு
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.