கல்பாக்கத்தில் உள்ள இந்திரா அணு ஆராய்ச்சி மையம் தினந்தோறும் 40 மெகாவாட் முழு மின் உற்பத்தி செய்து சாதனை

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா அணு ஆராய்ச்சி மையம் தினந்தோறும் 40 மெகாவாட் முழு மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

Update: 2022-03-27 14:05 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் இந்திரா அணு ஆராயச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்குகின்றன. இந்தியாவில் உள்ள அணுசக்தி துறை நிறுவனங்களில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. இந்திய அணு சக்தி மின் உற்பத்தியில் அடுத்தடுத்த முன்னேற்றம் குறித்த ஆய்வில் இந்த மையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக இங்கு அதிவேக ஈணுலை பரிசோதனை வினைகலன் இயங்குகிறது. அணுமின் உற்பத்தியில் நாட்டின் 2-ம் நிலை முன்னேற்ற முயற்சி தொடர் பரிசோதனையில் வேக ஈனுலை தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. பரிசோதனை ஆய்வுக்காக செயல்படும் எப்.டி.ஆர். கலன் 40 மெகாவாட் மின்திறனில் பெரும்பான்மை வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே 10 மெகாவாட்டுக்கும் சற்று கூடுதலாகவே மின்சாரம் உற்பத்தியானது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் ஒருமுறை அதிகபட்சம் 32 மெகாவாட் மின் உற்பத்தியும், 2019-ம் ஆண்டில் 30 மெகாவாட் என மின்உற்பத்தியானது. பெரும்பான்மை வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து புதிய நுட்பங்கள் பரிசோதிக்கப்பட்டது. 

இத்தகைய முயற்சி வெற்றியடைந்து கடந்த 7-ந்தேதி முதல் நாளொன்றுக்கு முறையாக 40 மெகாவாட் மின் உற்பத்தி முழு திறனில் உற்பத்தியாகி இந்திய அளவில் மாற்ற மாநிலங்களில் உள்ள அணு சக்தி நிறுவனங்களை காட்டிலும் கல்பாக்கம் இந்திரா அணு ஆராயச்சி மையம் சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்