குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Update: 2022-03-27 13:54 GMT
குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவி தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நகராட்சியில் இரண்டு வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மார்ச் மாதம் 4-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி போட்டியிடாததால் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருநாவுக்கரசு போட்டியிட்டு துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த கட்சி தலைமை அறிவித்தது. இதையடுத்து துணைத்தலைவர் பதவியை திருநாவுக்கரசு ராஜினாமா செய்தார்.

காலியாக இருந்த அந்த பதவிக்கான தேர்தல் நேற்று மாலை நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் திருநாவுக்கரசு மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்