அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கல் குறித்து சோதனை செய்த வீட்டில் மர்மபொருள் வெடித்தது.2 போலீஸ் காரர்கள் காயம்

அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கல் குறித்து வீட்டில் சோதனை செய்தபோது மர்ம பொருள் வெடித்து 2 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-03-27 13:53 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கல் குறித்து வீட்டில் சோதனை செய்தபோது மர்ம பொருள் வெடித்து 2 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மர்மபொருள் வெடித்து போலீசார் காயம்

அரக்கோணம் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணம்‌ மசூதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக நேற்று மதியம் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உத்தரவின் பேரில் சந்தோஷ், ஏழுமலை ஆகிய போலீசார் இருவரும் ரியாஸ் (வயது 19) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். 

அப்போது அங்கிருந்த ஒரு பையில் இருந்து கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த மற்றொரு பையை திறந்த போது அதில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதில் சோதனையில் ஈடுபட்டிருந்த இரு போலீசாரின் கைகளில் காயம் ஏற்பட்டது.

வாலிபருக்கு வலைவீச்சு 

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் சிகிச்சையில் உள்ள போலீசாரிடம் உடல் நலம் குறித்தும், அங்கு நடந்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார். 

மேலும், பையில் இருந்து வெடித்த மர்ம பொருள் நாட்டு வெடி குண்டா என டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தலை மறைவாக உள்ள ரியாசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்