பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை
பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நகை-பணம் கொள்ளை
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 72). இவர் மனைவியுடன் தனியாக வசித்து வரும் நிலையில், நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை பூட்டி விட்டு தூங்க சென்றனர். பின்னர், வழக்கம் போல் காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பின்பக்க அறையில் வைக்கப்பட்ட பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் கொள்ளையர்கள் கைரேகேகைகள் பதிவாகி உள்ளதா? என சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.