கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
மீனவர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
மீனவர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
உதவித்தொகை
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி டி.இ.எம்.கே.ஏ. அறக்கட்டளையின் உபரி நிதியில் இருந்து மீனவர் குடும்பத்தினை சேர்ந்த, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிக்கூடம், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம், அரசு ஆதரவற்றோர் பள்ளிக்கூடம், மாநகராட்சி பள்ளிக்கூடம், நகராட்சி பள்ளிக்கூடம் ஆகிய ஏதேனும் ஒன்றில் படித்து, பிளஸ்-2 வகுப்பில் 60 விழுக்காடு மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களில் தகுதியான மாணவர்கள் எவரும் இல்லை எனில் ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு அனுமதிக்கப்படும். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் அனைத்து பாடங்களிலும் 50 விழுக்காடு மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஒரு சவரன் தங்கம்
இதேபோல், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி டி.இ.என்.வி. அம்மாள் கல்வி உதவித்தொகை உபரி நிதியில் இருந்து பழங்குடி மக்களில் பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-2020-ம் கல்விஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிக்கூடம், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம், அரசு ஆதரவற்றோர் பள்ளிக்கூடம், மாநகராட்சி பள்ளிக்கூடம், நகராட்சி பள்ளிக்கூடம் ஆகிய ஏதேனும் ஒன்றில் படித்து, பிளஸ்-2 வகுப்பில் 60 விழுக்காடு மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களில் தகுதியான மாணவர்கள் எவரும் இல்லை எனில் ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு அனுமதிக்கப்படும். வேளாண்மை, வனம், தோட்டக்கலை, மீன்வளம் சார்ந்த ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவ -மாணவிகள், முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் அனைத்து பாடங்களிலும் 50 விழுக்காடு மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2221912 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.