பூசாரிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி-சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்
பூசாரிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டி செல்லும் அவலம் நடந்து வருகிறது.
ஓமலூர்:
பூசாரிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டி செல்லும் அவலம் நடந்து வருகிறது.
பூக்கள் சாகுபடி
ஓமலூர், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி, டேனிஷ்பேட்டை, தும்பிபாடி, கொங்குபட்டி, காருவள்ளி மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்தி, சாந்தினி, செண்டுமல்லி, செண்டு பூர்ணிமா, மஞ்சள் பூர்ணிமா போன்ற பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.
அறுவடை செய்யப்படும் பூக்களை விவசாயிகள் பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டுக்கும், சேலம் தேர்முட்டி பூ மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
விலை வீழ்ச்சி
பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் கிலோ ரூ.80 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியது. நேற்று மேலும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பெரும்பாலான வியாபாரிகள் விலை வீழ்ச்சி அடைந்து பூக்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் பூக்களை சாலையோரங்களிலும், கழிவு நீர் கால்வாய்களிலும் கொட்டி சென்ற அவலம் ஏற்பட்டது.
இதுகுறித்து பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-
செண்ட் தொழிற்சாலை
பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பூக்களில் நிலையற்ற விலையினால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். ஆகவே நீண்ட காலமாக பூசாரிப்பட்டியை மையமாக கொண்டு செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த தொழிற்சாலை அமைந்தால் மட்டுமே பூக்களின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தி விவசாயிகளை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.