நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை நெல்லையில் வாகை சந்திரசேகர் பேட்டி

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்

Update: 2022-03-26 21:38 GMT
நெல்லை:
நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, நாட்டுப்புற கலைஞர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பின்னர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பெயரை பதிவு செய்ய மனுக்களை வழங்கினர்.
பின்னர் வாகை சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1 லட்சம் உறுப்பினர்கள்
தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் கிராமிய கலைஞர்கள் உள்ளனர். எனினும் கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் மட்டுமே நலவாரிய அடையாள அட்டை பெற்று உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய அடையாள அட்டையை எளிதில் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் 3 மாத காலத்துக்குள் 1 லட்சம் உறுப்பினர்கள் நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கான ஓய்வூதியத்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்ட போதிலும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை மாற்றி, தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பநல நிதி ரூ.25 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் ஒரு மாதத்திற்குள் 18 நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பம் பயனடைந்துள்ளது.
19 திட்டங்கள்
கிராமிய கலைஞர்களையும், கலைகளையும் பாதுகாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வந்த 21 வகையான திட்டங்களில் 19 திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பத்தை பாதுகாக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மதுரை மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்த வாகை சந்திரசேகரை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சந்தித்து வரவேற்றார்.

மேலும் செய்திகள்