துணை தலைவர் பதவிக்கான மறைமுக ேதர்தல் ஒத்திவைப்பு
துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.;
அரியலூர்:
துணை தலைவர் பதவி
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து 3 சுயேச்சை வேட்பாளர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாந்தி கலைவாணன் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலை துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிட்ட போதிய கவுன்சிலர்கள் வராததால், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர் கண்ணன் தி.மு.க.வில் இணைந்தார்.
மறைமுக தேர்தல்
இந்நிலையில் அரியலூர் நகராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று மதியம் 2.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று மதியம் அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் ஆகியோர் நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.
மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும்(சத்துணவு திட்டம்), தேர்தல் அதிகாரியுமான ஆறுமுகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், தேர்தல் பார்வையாளருமான சுந்தர்ராஜன், நகராட்சி ஆணையர் சித்ராசோனியா ஆகியோர் கூட்டமன்றத்திற்கு வந்து அமர்ந்திருந்தனர்.
ஒத்திவைப்பு
மதியம் 3 மணிக்கு தேர்தல் அதிகாரி, வந்திருந்த கவுன்சிலர்கள் எண்ணிக்கையை சரிபார்த்தார். அப்போது 7 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து தேர்தல் நடத்த போதிய எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் இல்லாததால், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி ஆறுமுகம் அறிவித்தார். இதையடுத்து கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து சென்றனர்.