காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கைப்பற்றியது-ஏத்தாப்பூர் துணைத்தலைவராக தி.மு.க. போட்டி வேட்பாளர் தேர்வு
காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கைப்பற்றியது. ஏத்தாப்பூர் துணைத்தலைவர் பதவி தேர்தலில் தி.மு.க. போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
சேலம்:
காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கைப்பற்றியது. ஏத்தாப்பூர் துணைத்தலைவர் பதவி தேர்தலில் தி.மு.க. போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பேரூராட்சி தலைவர் தேர்தல்
காடையாம்பட்டி பேரூராட்சி தேர்ததில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 7 வார்டுகளை கைப்பற்றின. மேலும் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 12-வது வார்டு கவுன்சிலர் குமார் தி.மு.க. சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த 4-ந் தேதி நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போதிய கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் 15 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் வெற்றி
தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் 3-வது வார்டு கவுன்சிலர் குப்புசாமி மனு தாக்கல் செய்தார். இதில் குமார் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குப்புசாமி 6 வாக்குகள் பெற்ற நிலையில், ஒரு வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
தொடர்ந்து மதியம் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருநாவுக்கரசு 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாந்தி 7 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலையொட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏத்தாப்பூர்
ஏத்தாப்பூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் பங்கேற்கவில்லை. தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் தேர்தலில் பங்கேற்க வந்தனர். இதில் 4 பேர் திடீரென வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து துணை தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக தலைமை கழகம் அறிவித்த பாபு என்கிற வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக தி.மு.க. கவுன்சிலர் மாரிமுத்து மனு தாக்கல் செய்தார். 6 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் போட்டி வேட்பாளர் மாரிமுத்து 4 வாக்குகளை பெற்றார். இதனால் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு பதிலாக, தி.மு.க. போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வெற்றி
கருப்பூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 4-ந் தேதி நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சுலக்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் நீலாதேவி திடீரென மருத்துவ சிகிச்சைக்காக சென்று விட்டதால் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற துணைத்தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாந்தி முருகேசன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோவிந்தனிடம் வேட்புமனுவை வழங்கினார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சாந்தி முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன் அவருக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார். துணைத்தலைவராக காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தி முருகேசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.