சிவகங்கை அருகே லாரிகளில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகங்கை அருகே லாரிகளில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை,
சிவகங்கை அருகே லாரிகளில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்திரராஜன், சுரேஷ் மற்றும் ஏட்டு சரவணகுமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் சருகனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியில் வந்த மினி லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 3 டன் எடையுள்ள 60 மூடை ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
இதே போல தேவகோட்டை அருகே திருவேகம்புத்தூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இப் புகாரின் அடிப்படையில் திருவேகம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது உருவாட்டி பாலம் அருகே வந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து லாரியில் சோதனை செய்த போது அதில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் லாரியில் இருந்த மற்றொரு உதவியாளரை போலீசார் பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த 4 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.