மாடு மேய்த்த மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கு: சிறுவன் உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை இலுப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுவன் உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.;
காரையூர்:
காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் கருப்பையா மனைவி தருமுஅம்மாள் (வயது 60). இவர் கடந்த ஆண்டு (2021) மேலத்தானியம்- கீழத்தானியம் சாலையில் கிளிக்குடியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் சேர்ந்து வழி கேட்பது போல தருமுஅம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலி, 1 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து தருமு அம்மாள் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த பொதுமக்கள் 2 பேரை விரட்டி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மற்றொருவரை காரையூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணையில், மதுரை கீழதுரை வேதபிள்ளைதெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சரண் என்கிற சரவணபாண்டி (29), 18 வயது சிறுவன், மதுரை மேல அணுப்பாண்டியை சேர்ந்த அன்பழகன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு இலுப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி பிச்சைராஜன், சிறுவன் உள்பட 3 பேருக்கும், தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.