தப்பிய ரவுடி கும்பலை மடக்கி பிடித்தது பற்றி பரபரப்பு தகவல்

காதலனை கட்டிப்போட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடிகளை பிடித்த போலீஸ் நடவடிக்கை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது, இந்த சம்பவத்தின் போது அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த சப்-இன்ஸ்ெபக்டர், ஏட்டு ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-26 19:01 GMT
கமுதி, 

காதலனை கட்டிப்போட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடிகளை பிடித்த போலீஸ் நடவடிக்கை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது, இந்த சம்பவத்தின் போது அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த சப்-இன்ஸ்ெபக்டர், ஏட்டு ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாலியல் துன்புறுத்தல்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலன் ஹரிகிருஷ்ணனும் (வயது 24) கடந்த 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். காதலர்கள் இருவரும் கடற்கரையில் இருந்த போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் காதலனை அடித்து உதைத்து, துப்பட்டாவால் அவரை கட்டி போட்டனர். பின்னர் தனியாக இருந்த அந்த சிறுமியை 3 பேரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் காதல் ஜோடி வைத்திருந்த செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

விஷம் குடித்த காதலன்

தன் கண்முன்னே காதலி பாலியல் தொல்லைக்கு ஆளானதை அறிந்த ஹரிகிருஷ்ணன் வேதனையுடன் அவரை அழைத்துக் கொண்டு ஊர்திரும்பினார். பின்னர் காதலியை அவரது ஊரில் விட்டுவிட்டு அருப்புக்கோட்டைக்கு சென்ற ஹரிகிருஷ்ணன், மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 2 நாட்களாக அவர் அதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்ைச அளிக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்்து பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை
உடனே சம்பவம் நடந்த மூக்கையூர் கடற்கரை பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 வாலிபர்கள் கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. 
விசாரணையில் அவர்கள் கமுதி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மாஸ்வரன்(24), விருதுநகர் மாவட்டம் நத்தக்குளத்தை சேர்ந்த தினேஷ்குமார்(24), அதே ஊரை சேர்ந்த அஜித்(24) என்பதும், இவர்கள் 3 பேரும்தான் காதலனுடன் வந்த சிறுமியிடம் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

 போலீசாருக்கு அரிவாள் வெட்டு

இதற்கிடையே காதல் ஜோடியிடம் இருந்து அந்த வாலிபர்கள் கைப்பற்றிய செல்போன் இருக்கும் இடத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். அவர்கள் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் இருப்பதாக செல்போன் சிக்னல் மூலமாக போலீசார் அறிந்தனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், ஏட்டு கருப்பசாமி உள்ளிட்ட போலீசார் அவர்களை பிடிக்க குண்டுகுளம் சென்றனர். அங்கு பத்மாஸ்வரன்(24), திேனஷ்குமார்(24) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்கள். போலீசார் அவர்களை விரட்டினர். பின்னர் அவர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், ஏட்டு கருப்பசாமி ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர். அப்போது இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் ரவுடிகள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கால்கள் முறிந்தன.

3 பேர் கைது

தப்ப முயன்று காயம் அடைந்த ரவுடிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும், காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவும் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரான அஜித் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், திருப்பூரில் சிக்கியதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார்.
 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்