பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் கவுன்சிலர் வெற்றி பாளையம் துணைத்தலைவர் பதவியை ம.தி.மு.க. கைப்பற்றியது

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் கவுன்சிலர் வெற்றி பெற்றார். பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை ம.தி.மு.க. கைப்பற்றியது.

Update: 2022-03-26 19:00 GMT
பட்டிவீரன்பட்டி:

பேரூராட்சி தலைவர் பதவி

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க, பா.ஜ.க, சுயேச்சை ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.
ஆனால் கடந்த 4-ந்தேதி பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்காக நடந்த மறைமுக தேர்தலில் 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கல்பனாதேவி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த துணைத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கவுன்சிலர்

இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பேரூராட்சி தலைவர் பதவியை கல்பனாதேவி ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தலைவராக தி.மு.க. கூட்டணியில் உள்ள 1-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சியாமளா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதேேபால் துணைத்தலைவராக 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கல்பனாதேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் 2 பேரும் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அன்புமணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசுந்தரி ஆகியோர் அறிவித்தனர்.

பாளையம் பேரூராட்சி

பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 வார்டுகளில் தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
பின்னர் கடந்த 4-ந்தேதி நடந்த பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் தலைவராக 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமியும், துணைத்தலைவராக 13-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கதிரவனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ம.தி.மு.க. கவுன்சிலர் வெற்றி

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகியான சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் கடந்த 7-ந்தேதி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கிரி மறைமுக தேர்தலை நடத்தினார். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள 4-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் லதா துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்