புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயில்: மண்பானைகள் விற்பனை படுஜோர்
புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதையொட்டி மண்பானைகள் விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
சுட்டெரிக்கும் வெயில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் சுட்டெரிக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டையில் வெயில் அதிகமாக அடிக்க தொடங்கி உள்ளது. தினமும் 90 டிகிரிக்கு மேல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருக்க தப்பிக்க பொதுமக்கள் தர்பூசணி பழங்கள், வெள்ளரி பிஞ்சுகள் உள்பட பழங்களை சாப்பிட்டும், இளநீர், பழச்சாறு வகைகள், குளிர்பானங்களை அருந்தியும் வருகின்றனர். சிலர் வெளியில் செல்லும் போது குடைகளை பிடித்தப்படி செல்கின்றனர்.
மண்பானைகள்
இந்த நிலையில் இயற்கை முறையில் தண்ணீர் குளிர்ச்சி அடைய செய்யும் மண்பானைகளை பொதுமக்கள் ஏராளமானோர் வாங்கி செல்வதை காணமுடிகிறது. மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தால், அந்த தண்ணீர் குளிர்ந்த நீராகும். அதனை குடிக்கும் போது உடலில் வெப்பம் தணியும். மேலும் அடிக்கிற வெயிலுக்கு தாகத்தை தீர்க்கும். இதனால் பொதுமக்கள் தற்போது வீடுகளில் மண்பானைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் அதன்விற்பனை தற்போது படுஜோராக நடைபெறுகிறது. சாலையோரங்களில் மண்பானைகள் விற்பனைக்காக குவித்து வைத்து வியாபாரம் செய்துவருகின்றனர்.
குழாய் வசதி
தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப மண்பானைகளை தொழிலாளர்கள் வடிவமைப்பு செய்ய தொடங்கி உள்ளனர். பானையில் தண்ணீர் பிடிக்க வசதியாக குழாய் வைத்தும் தயாரிக்கின்றனர். இதனால் கேனில் தண்ணீர் பிடிப்பது போல மண்பானையிலும் தண்ணீர் பிடிக்க எளிதாக உள்ளது. வீடுகளில் பலர் பிரிட்ஜ் பயன்படுத்தினாலும் ஏழை, நடுத்தர மக்கள் குளிர்ந்த நீரை குடிக்க அதிகம் பயன்படுத்துவது மண்பானை தான். இதனால் மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.