துணை தலைவராக வி.சி.க. கவுன்சிலர் கிரிஜா திருமாறன் போட்டியின்றி தேர்வு
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மறைமுக தேர்தலில் துணை தலைவராக வி.சி.க. கவுன்சிலர் கிரிஜா திருமாறன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லிக்குப்பம்,
30 வார்டுகளை கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 11 வார்டுகளிலும், அ.தி.மு.க.-3, வி.சி.க. -2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க., ம.தி.மு.க. தலா 1 வார்டுகளிலும், சுயேச்சை 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதையடுத்து கடந்த 4-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலில் நகரமன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று பதவியேற்றுக் கொண்டார். ஆனால் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு மார்ச் 26-ந் தேதி (அதாவது நேற்று) மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று தேர்தல் பார்வையாளர் ஜெயக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி ஆகியோர் மேற்பார்வையில் மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிரிஜா திருமாறன், துணை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கிரிஜா திருமாறன் போட்டியின்றி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். உடனே அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர், சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.