ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி
மதுரை கோட்டத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை,
மதுரை கோட்டத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
பராமரிப்பு பணி
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி - வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 11.5 கி.மீ. தூரத்துக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் கடந்த 26-ந் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புதிதாக போடப் பட்டுள்ள அகலப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரூ.19.23 கோடி மதிப்பில் நடந்து வரும் இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வழக்கமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்து வரும். ஆனால், மதுரை-தூத்துக்குடி, நெல்லை ரெயில் பாதையில் அதிகஅளவு போக்குவரத்து இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.
தகவல் அறியும் சட்டம்
அதனை தொடர்ந்து, மதுரை-விருதுநகர், விருதுநகர்- கோவில்பட்டி, கோவில்பட்டி-மணியாச்சி மற்றும் மணியாச்சி- தூத்துக்குடி, நெல்லை ரெயில் பாதைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில், கோவில்பட்டி வரையிலான பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், கோவில்பட்டி-மணியாச்சி இடையேயான பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இது குறித்து, மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜனுக்கு, கோட்ட முதுநிலை என்ஜினீயர் முகைதீன்பிச்சை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி வழங்கியுள்ள பதிலில், இந்த பாதையில் தண்டவாளங்களின் அடித்தளத்தை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிய அடித்தளம்
தற்போது உள்ள களிமண் அடித்தளம் முழுமையாக நீக்கப்பட்டு, சரளைக்கற்கள் கொண்டு புதிய அடித்தளம் போடப்பட்டு வருகிறது. தண்டவாளப்பகுதியின் தன்மையை பொறுத்து, இந்த பாதையில் ரெயில்களின் வேகம் மணிக்கு 70 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் இந்த வேகம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.