தஞ்சையில் போலீசாரை தள்ளி விட்டு கைதி தப்பியோட்டம்

கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சிறைக்கு திரும்ப அழைத்துச்சென்ற போது தஞ்சையில், போலீசாரை தள்ளி விட்டு தப்பிச்சென்ற கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-26 18:28 GMT
தஞ்சாவூர்:
கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சிறைக்கு திரும்ப அழைத்துச்சென்ற போது தஞ்சையில், போலீசாரை தள்ளி விட்டு தப்பிச்சென்ற கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வழிப்பறி கொள்ளை
திருச்சி தாராநல்லூரை சேர்ந்த அன்பழகன் மகன் தர்மராஜ்(வயது 27). இவர், புதுக்கோட்டையில் உள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையங்களிலும் தர்மராஜ் மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக தர்மராஜை தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் புதுக்கோட்டை கிளைச்சிறையில் இருந்து பஸ்சில் தஞ்சைக்கு அழைத்து வந்தனர்.
கைதி தப்பியோட்டம்
தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு புதுக்கோட்டை கிளை சிறைக்கு மீண்டும் அழைத்து செல்வதற்காக தஞ்சை மணிமண்டபம் ரவுண்டானா பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அப்போது தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த 2 போலீசாரையும் தர்மராஜ் கீழே தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இருப்பினும் சுதாரித்துக்கொண்டு எழுந்த போலீசார், தர்மராஜை விரட்டிச்சென்றனர். ஆனாலும் அவர் தப்பிச்சென்று விட்டார். 
வலைவீச்சு
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு தப்பியோடிய கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
மேலும் இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்