பொன்னை பகுதியில் அரசு மருத்துவமனை கட்டப்படும்; அமைச்சர் பேச்சு
பொன்னை பகுதியில் 100 படுக்கையுடன் கூடிய அரசு மருத்துவமனை விரைவில் கட்டப்படும் என்று காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.;
வேலூர்
பொன்னை பகுதியில் 100 படுக்கையுடன் கூடிய அரசு மருத்துவமனை விரைவில் கட்டப்படும் என்று காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வைத்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.
கதிர்ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பத்துரை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 20 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் ஏழை குடும்பங்கள் அதிகமாக காணப்படுகிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இந்த ஆட்சி செய்யும். கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் நாங்கள் 10 மாதங்களில் பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம்.
காட்பாடியில் விளையாட்டு மைதானத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கி கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் வேலூரில் உள்ள கல்லூரிகளுக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்குவதற்காக வள்ளிமலையில் விரைவில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும்.
காட்பாடி தொகுதியில் படித்து முடித்து விட்டு வேலையில்லாத இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்காக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 100 ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது.
அரசு மருத்துவமனை
பொன்னையில் 100 படுக்கையுடன் கூடிய அரசு மருத்துவமனை விரைவில் கட்டப்படும். இதேபோல் காட்பாடியில் உள்ள டெல் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் அங்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில், ஒரு திட்டம் தான் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள நகை கடன் தள்ளுபடி. நீங்கள் வைத்த நகைக்கான அசல் மற்றும் வட்டி இல்லாமல் உங்களிடமே பத்திரமாக நகைகள் திருப்பித் தரப்படுகிறது.
முதல்-அமைச்சர் தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு அதிக முதலீடுகளை பெற்று தமிழகம் திரும்புவார். தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்றுவார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 215 கூட்டுறவு வங்கிகளில் 72,702 பேர் நகைகளை அடகு வைத்து ரூ.238 கோடியே 86 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
அவர்களில் 54,964 பேருக்கு ரூ.157 கோடியே 58 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விழாவில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர் அருட்பெருஞ்ஜோதி நன்றி கூறினார்.