கிருஷ்ணகிரி அரசு பெண்கள் பள்ளியில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா அமைச்சர் காந்தி பங்கேற்பு
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.
சுதந்திர தின விழா
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், தளி டி.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த பல்துறை பணி விளக்க கண்காட்சி ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து மொத்தம் 79 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சத்து 48 ஆயிரத்து 291 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி வைத்து அனைவருக்கும் மஞ்சபையை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஆணையாளர் முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.