மதுரை எய்ம்ஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் 4-ந்தேதி தொடக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மேலும் அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-03-26 17:50 GMT
மதுரை, 
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மேலும் அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
மதுரை எய்ம்ஸ் 
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 50 மருத்துவ இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ராமநாதபுரத்தில் வகுப்புகள் மற்றும் செயல்முறை வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.
இதுகுறித்து எய்ம்ஸ் அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ராமநாதபுரத்தில் தொடர் ஆய்வு நடத்தி வந்தனர். இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 4-ந்தேதி தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
4-ந்தேதி தொடக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு பின்னர் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. வகுப்புகளுக்குத் தயாராக வர வேண்டும்.
கல்லூரி வளாகத்திற்கு வரும்போது சாதாரண உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். டி-ஷர்ட்கள், ஜீன்ஸ், செருப்புகள், விளையாட்டு காலணிகள், கேன்வாஸ் ஷூக்கள் போன்றவைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும், மாணவர்களுடன் வருபவர்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதாவது, சரிவர முககவசம் அணிய வேண்டும், கைசுத்திகரிப்பான் மூலம் கையை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை மீறக்கூடாது.
5-வது மாடியில்...
மேலும், ஒவ்வொரு மாணவரும் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட பாதுகாப்பிற்காக 100 எண்ணிக்கையில் முககவசம், கிருமிநாசினி போன்றவையும் கொண்டு வரவேண்டும். மேலும் தகவல்களுக்காக மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் 5-வது மாடியில் எய்ம்ஸ்அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்