திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.
திருக்கடையூர்:-
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கி அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகவும் விளங்குகிறது.
மேலும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இக்கோவிலில் பக்தர்கள் கொண்டாடுவது சிறப்பம்சமாகும்.
மூன்று ராஜ கோபுரங்கள் கொண்ட இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
குடமுழுக்கு
இன்று காலை 5 மணிக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 8-வது யாகசாலை பூஜைகள் நடக்கிறது.. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடக்கிறது. அதைத்தொடர்ந்து 10.30 மணி அளவில் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு மகா குடமுழுக்கு நடக்கிறது.
குடமுழுக்கு விழாவில் ஆதீனங்கள், கட்டளை தம்பிரான்கள், அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.