மோட்டார் சைக்கிள் கார் மோதல் போலீஸ்காரர் பலி

தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார். மேலும் 2 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2022-03-26 17:38 GMT
கண்டாச்சிமங்கலம், 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏரவார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமரவேல்(வயது 29). இவர், உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இவருடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள கருங்காலி குப்பத்தை சேர்ந்த பார்த்திபன் மகன் கலைவாணன் (30), சங்கராபுரம் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்த வேலு மகன் கார்த்தி (32) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

தியாகதுருகம் அருகே மாடூரில் முன்னால் சென்ற கார் திடீரென இடதுபக்கமாக திரும்பி, 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 3 போலீஸ்காரர்களும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 போலீஸ்காரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இது குறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கார்த்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் கார் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வள்ளிமலையை சேர்ந்த விஜயகுமார் மகன் ஆனந்தராஜ்(22) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்