சங்கராபுரம் பேரூராட்சி மன்ற துணை தலைவரானார், ஆஷாபீ

மறைமுக தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆஷாபீ சங்கராபுரம் பேரூராட்சி மன்ற துணை தலைவரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கவுன்சிலர் தோல்வி அடைந்தார்.

Update: 2022-03-26 17:35 GMT
சங்கராபுரம், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்கள் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதில் தலைவராக தி.மு.க. கவுன்சிலர் ரோஜா ரமணி தேர்வு செய்யப்பட்டார். 
இதனை தொடர்ந்து அன்று மதியம் நடைபெற்ற துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின் போது போதிய கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி 

இந்த நிலையில் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.  இதற்கு சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளருமான ராஜவேல் தலைமை தாங்கினார். தனி மேற்பார்வையாளர் ரத்தினமாலா முன்னிலை வகித்தார். 
இதில் தி.மு.க. தலைமை அறிவித்தபடி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 5-வது வார்டு கவுன்சிலர் ஆஷாபீ போட்டியிட்டார். இவரை எதிர்த்து 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாவும் போட்டியிட்டார். மொத்தம் 15 வாக்குகள் பதிவானது. இதில் ஆஷாபீ 9 வாக்குகளும், சுதா 5 வாக்குகளும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. ஆஷாபீ வெற்றிபெற்று சங்கராபுரம் பேரூராட்சி மன்ற துணை தலைவரானார். இவருக்கு செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்