சுற்றுலா பயணிகள் வந்த கார் கவிழ்ந்து 5 பேர் காயம்
குலசேகரம் அருகே சுற்றுலா பயணிகள் வந்த கார் கவிழ்ந்து 5 பேர் காயம்
குலசேகரம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த 5 பேர் காரில் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று காலையில் கன்னியாகுமரிக்கு சென்று அங்கு சூரிய உதயத்தை கண்டு களித்தனர். பின்னர் பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திற்பரப்பு அருவியை நோக்கி புறப்பட்டனர். குலசேகரம் அருகே அண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென அந்த கார் சாலையோரம் இருந்த சுமார் 3 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
காரில் இருந்த 5 ஆண்களும் காயமடைந்தனர். விபத்து நடந்ததும் அந்த பகுதியில் நின்ற மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.