தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் 3-வதுநாளாக காத்திருப்பு போராட்டம்

கும்பகோணத்தில் தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-03-26 23:02 IST
கும்பகோணம்:
ம்பகோணத்தில் தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொழிலாளர்கள் வேலையிழப்பு
கும்பகோணத்தில் 40 ஆண்டுகள் பழமையான தனியார் புகையிலை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மெல்லும் புகையிலைக்கு தடை விதித்தது. இதையடுத்து இந்த தனியார் புகையிலை நிறுவனம் மூடப்பட்டது. இதனால் இந்த நிறுவனத்தில் வேலைபார்த்த 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 
தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி கும்பகோணத்தில் உள்ள தனியார் புகையிலை தொழிற்சாலைக்கு முன்பு வேலை இழந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் கணேசன், செந்தில், இளங்கோ ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கும்பகோணம் மேயர் ஆதரவு 
அப்போது தமிழக அரசு மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்க வேண்டும், தனியார் நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ள தங்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன் ஆதரவு தெரிவித்து, மாநகராட்சி சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உதவுவதாக  உறுதியளித்தார்.
3-வதுநாளாக காத்திருப்பு போராட்டம் 
இந்தநிலையில் நேற்று 3-வதுநாளாக தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் 
சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்