தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ‘பி' சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ‘பி' சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ‘பி' சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
செய்முறை தேர்வு
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ‘பி' சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேர்வில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டத்திலிருந்து 11 கல்லூரிகளை சேர்ந்த 434 மாணவ-மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி என 2 இடங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய செய்முறை தேர்வில் அணிநடை பயிற்சி, ஆயுதங்கள் கையாள்தல், வரைப்படங்கள் அறிதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ், மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர்.
எழுத்துத்தேர்வு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தொடர்ந்து அடுத்த ஆண்டு ‘சி' சான்றிதழ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் ராணுவப்படையில் சேர்வதற்கான தகுதி பெறுவர். இந்த சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு, எழுத்துத்தேர்வு இன்றி நேரடியாக நேர்முகத்தேர்வு மூலம் ராணுவத்தில் சேவை புரிய வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயிற்சி திருச்சி 2-வது அணி தலைவர் கர்னல் கோசாமி தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை 4-வது பெண்கள் அணி தலைவர் எம்.என்.துபே, 8-வது அணி சுபேதார் மேஜர் பிரைட் ஆகியோர் செய்திருந்தனர்.