தண்ணீர் என நினைத்து மதுவில் திராவகத்தை கலந்து குடித்த விழுப்புரம் முதியவர் சாவு மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
தண்ணீர் என நினைத்து மதுவில் திராவகத்தை கலந்து குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
விழுப்புரம்
மதுவில் கலந்து
விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது 70). தொழிலாளியான இவரும், காவணிப்பாக்கத்தை சேர்ந்த மணிபாலன்(45) என்பவரும் நேற்று முன்தினம் வி.அரியலூர் குச்சிப்பாளையம் செல்லும் வழியில் ஆழாங்கால்பாலம் அருகே உள்ள இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் மது அருந்துவதற்காக தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று அங்கிருந்த பாட்டிலில் இருந்த திராவகத்தை (ஆசிட்) தண்ணீர் என நினைத்து தெரியாமல் எடுத்து வந்து மதுபானத்தில் கலந்து குடித்தாக தெரிகிறது.
முதியவர் சாவு
பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வாசுதேவன், மணிபாலன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வாசுதேவன் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மணிபாலனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.