வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
வடமதுரையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் வடமதுரை மற்றும் அய்யலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட வேலைகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று சார்பதிவாளர் அலுவலக நுழைவாயிலின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென்று பெரும் சத்தத்துடன் பெயர்ந்து விழுந்தது. இதை கண்டு பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், போதிய இடவசதி இல்லாத சிறிய கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் தற்போது மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நல்ல இட வசதி உள்ள புதிய கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-----------
-----------