52-வது போலீஸ் சூப்பிரண்டாக ஹரிகிரன் பிரசாத் பொறுப்பேற்பு

குமரி மாவட்டத்தின் 52-வது போலீஸ் சூப்பிரண்டாக ஹரிகிரன் பிரசாத் பொறுப்பேற்று கொண்டார். அவர் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என கூறினார்.

Update: 2022-03-26 16:29 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தின் 52-வது போலீஸ் சூப்பிரண்டாக ஹரிகிரன் பிரசாத் பொறுப்பேற்று கொண்டார். அவர் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என கூறினார். 
52-வது போலீஸ் சூப்பிரண்டு
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை தி.நகர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ஹரிகிரன் பிரசாத், குமரி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று காலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குமரியின் 52-வது போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், வேல்முருகன், சுந்தரம் உள்பட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தாமதமின்றி நடவடிக்கை
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டம், நமது நாட்டின் மிக முக்கியமான பகுதி ஆகும். பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை உள்ளடக்கி உள்ளது.  மேலும் கல்வி அறிவு அதிகம் உள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 
போலீசார் காவல்துறை மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது  போலீசார் எந்த வித தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அதுபோல், பொதுமக்களின் பாதுகாப்புக்கு காவல்துறை இருக்கிறது என்பதை மக்கள் முழுமையாக நம்ப வேண்டும்.
24 மணி நேரமும் செயல்படும்
மக்களுக்காக காவல்துறை 24 மணி நேரமும் செயல்படும். தங்களது குறைகளை எந்த நேரத்திலும் மக்கள் தெரிவிக்கலாம். விரைவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு ஆய்வுக்காக செல்ல இருக்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலந்து கொண்டார். பின்னர் அவர் கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆய்வு செய்தவதற்காக கொல்லங்கோட்டிற்கு சென்றார்.

மேலும் செய்திகள்