ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்
விழுப்புரம்
ரெயிலில் கஞ்சா கடத்தல்
ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று காலை விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே நடந்து வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதற்குள் 7 பெரிய பண்டல்கள் மற்றும் 11 சிறிய பண்டல்களில் 40 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திராவில் இருந்து
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து, விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் போடி தாலுகா கோடை டாங்கிபட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ்(வயது 42), மூனாப்பட்டி தாலுகா உத்தமபாளையத்தை சேர்ந்த மாரி மனைவி சரஸ்வதி(62) என்பதும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து புவனேஸ்வர்- ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி விழுப்புரம் வந்திறங்கியதும், பின்னர் இங்கிருந்து பஸ் மூலம் தேனி மாவட்டத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் இந்த கஞ்சாவை ஆந்திராவில் ஒரு கிலோ ரூ.10 ஆயிரம் என்ற விலையில் 40 கிலோவை ரூ.4 லட்சத்துக்கு வாங்கி அதை தமிழகத்திற்கு கொண்டு வந்து ஒரு கிலோ ரூ.50 ஆயிரம் என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும், இந்த கடத்தலில் ரமேசும், சரஸ்வதியும் முகவர்களாக செயல்பட்டிருப்பதும், இதற்கு மூளையாக கஞ்சா மொத்த வியாபாரி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரமேஷ், சரஸ்வதி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய கஞ்சா மொத்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.