கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2022-03-26 16:15 GMT
திண்டுக்கல்:
சுற்றுலா பயணிகள் வருகை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் வாரவிடுமுறை நாட்கள் மற்றும் குளு, குளு சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அதன்படி வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட இருமடங்காக அதிகரித்தது.
இதனால் முக்கிய சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தான் கொடைக்கானலில் குளு,குளு சீசன் தொடங்கும்.
ஆனால் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக பகல் நேரத்தில் குளுமையான பருவநிலையும், இரவில் மிதமான குளிரும் நிலவுவதால் சீசன் முன்கூட்டியே தொடங்கியது போன்ற அனுபவம் சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்தது.
போக்குவரத்து நெரிசல்
வார விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளை சுற்றுலா வாகனங்கள், பஸ்கள், கார்கள் என பல்வேறு வாகனங்கள் ஆக்கிரமித்தன.
வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் நேற்று கொடைக்கானலில் குவிந்தனர். குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்தனர். வாகன போக்குவரத்து அதிகரித்ததால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் பைன்மர காடுகள், குணா குகை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை பார்வையிட்டு ரசித்தும், ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் பொழுதை கழித்தனர்.
---

மேலும் செய்திகள்