நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி

கம்பத்தில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-26 16:08 GMT
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). லாரி டிரைவரான இவர், மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து மாதுளை பழங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு தமிழகம் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்வது வழக்கம். 
அதன்படி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் பழங்களை இறக்கிவிட்டு, காலி பிளாஸ்டிக் பழக்கூடைகளுடன் லாரியில் நேற்று கம்பத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் லாரியில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில், லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை பார்த்த செல்வம் உடனே சுதாரித்துக்கொண்டு சாலையோரம் லாரியை நிறுத்தினார். சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி லாரி கொழுந்துவிட்டு எரிந்தது. 
இதுகுறித்து கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு செல்வம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி லாரியில் பற்றி எரிந்த தீயை அவர்கள் அணைத்தனர். இருப்பினும் லாரியின் மேல்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. 
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் கம்பத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்