பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் அரசினர் உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 16 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்றதால் இங்கு பணியாற்றிய 8 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதலாகி சென்று விட்டனர். எனவே, 6-வது முதல் 8-வது வரை 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 10-ம் வகுப்பிற்கு கணித ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
வருகிற திங்கட்கிழமை முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. எனவே, தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பாட பிரிவுகளுக்கும் போதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும், சமயலறை கட்டிடம் கட்டி தர வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10-ம் வகுப்பு படிக்கும் 61 மாணவ மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தங்கள் பெற்றோருடன் சேர்ந்து பள்ளிக்கு எதிரே அமர்ந்து தமிழக அரசையும், கல்வித்துறையையும் கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், தற்போது 4 ஆசிரியர்களை நியமித்து உள்ளதாகவும் விரைவில் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். வருகிற திங்கட்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி விட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை 2 மணி நேரம் பள்ளியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
நேற்று முன்தினம் பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக பெற்றோர்களுடன் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.