குண்டடம் வாரசந்தையில் ஆடு கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி
குண்டடம் வாரசந்தையில் ஆடு கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி
குண்டடம்:
குண்டடம் வாரசந்தையில் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
ஆடுகள் வரத்து அதிகரிப்பு
ஆடு, கோழி வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வாங்கி விற்கும் வியாபாரிகள் குண்டடம் வாரசந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-
குண்டடம் வாரசந்தை சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை செயல்படுவது வழக்கம். இங்கு ஆடு,கோழிகள் விற்பனை நடைபெறுகிறது.
அதன்படி இந்த சந்தைக்கு ஆடு கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர்.
இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு வருகின்றனர்.
மேலும் இறைச்சி கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள 1 ஆடு ரூ.7ஆயிரத்துக்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கே விலைபோனது. ரூ.12ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள், இந்த வாரம் ரூ.9ஆயிரத்து விற்பனையானது. இதனால் விலை விழ்ச்சி ஏற்பட்டது.
கோழி விலை வீழ்ச்சி
சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகாலை 3 மணிமுதல் காலை 8 மணிவரை ஆயிரக்கணக்கான கோழிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மேலும் வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்த கோழிகளை வாங்க தாராபுரம், காங்கயம், பல்லடம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச் சென்றனர்.
கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலைபோனது. ஆனால் இந்தவாரம் ரூ.300 முதல் ரூ.350 வரை விலைபோனது.
இவ்வாறு அவர் கூறினார்.