உடுமலை நகராட்சி துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த சுகலைராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்
உடுமலை நகராட்சி துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த சுகலைராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்
உடுமலை:
உடுமலை நகராட்சி துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சு.கலைராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கவுன்சிலர்கள் 23 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும், காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க. கவுன்சிலர்கள் தலா ஒருவரும் உள்ளனர்.
கடந்த 4-ந்தேதி நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவித்திருந்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் மு.ஜெயக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த மு.மத்தீன் (தி.மு.க) 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மு.ஜெயக்குமாருக்கு 8 வாக்குகள் கிடைத்திருந்தது.
இதைத்தொடர்ந்து அன்று (4.3.2022) பிற்பகல் துணைத்தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்கொண்டிருந்தார். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு தேவையான கோரம் (கவுன்சிலர்கள் வருகை) இல்லாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
துணைத்தலைவர் தேர்தல்
இதைத்தொடர்ந்து, ஒத்தி வைக்கப்பட்டிருந்த உடுமலை நகராட்சி துணை தலைவருக்கான தேர்தல் நேற்றுகாலை நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. தேர்தலை துணைத்தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலரான தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் நடத்தினார். இதில் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இந்த தேர்தலில் போட்டியிட 32-வது வார்டு கவுன்சிலர் சு.கலைராஜன் (தி.மு.க) ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனால் அவர் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான சான்றிதழை அவருக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரான தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் வழங்கினார். அப்போது உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், உடுமலை நகராட்சி தேர்தல் பார்வையாளர் மோகன் ஆகியோரும் உடனிருந்தனர். நகராட்சி துணைத்தலைவர் தேர்தலையொட்டி நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.