சங்கராமநல்லூர் பேரூராட்சியில் தலைவராக மல்லிகா வெற்றி
சங்கராமநல்லூர் பேரூராட்சியில் தலைவராக மல்லிகா வெற்றி
தளி:
சங்கராமநல்லூர் பேரூராட்சியில் தலைவராக மல்லிகா வெற்றி பெற்றார். துணைத்தலைவராக பிரேமலதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சங்கராமநல்லூர் பேரூராட்சி
மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட சங்கராமநல்லூர் பேரூராட்சியின் 15 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க. 8 வார்டுகளையும் கூட்டணிக்கட்சியான ம.தி.மு.க. 2 வார்டுகளையும் அ.தி.மு.க. 5 வார்டுகளையும் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து கடந்த 4-ந் தேதி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. தலைமை அறிவித்தபடி ருத்ராபாளையத்தைச் சேர்ந்த 5-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லிகாகருப்புசாமி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அத்துடன் துணைத்தலைவர் பதவியும் அதே பகுதியை சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டது.
வாக்குச்சீட்டுகள் மீது மை
இதற்கு குப்பம்பாளையத்தைச் சேர்ந்த தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் 15-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வைச்சேர்ந்த பிரேமலதா உத்தமராஜ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் வாக்குப்பதிவின் போது அங்கிருந்த சிலர் வாக்குச்சீட்டுகள் மீது மை ஊற்றி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மறுதேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான ரவிச்சந்திரன் தேர்தலை நடத்தினார்.
தலைவர்,துணைத்தலைவர்
அப்போது ருத்ராபாளையத்தைச்சேர்ந்த மல்லிகாகருப்புசாமி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுப்புலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் 10 வாக்குகள் பெற்று தி.மு.க.வைச் சேர்ந்த மல்லிகா கருப்புசாமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட சுப்புலட்சுமி 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று மதியம் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது குப்பம்பாளையத்தை சேர்ந்த பிரேமலதா உத்தமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதைத்தொடர்ந்து அவர் துணைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்பு தி.மு.க.வினர் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.