ஊட்டி
ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று ஊட்டி மெயின் பஜாரில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பண்டகசாலையின் ரேஷன் கடை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகள் நடைபாதையில் சிதறி கிடந்தது. ரேஷன் கடை மேற்பகுதியில் உள்ள கட்டிடத்தில் விரிசல் அதிகமாக உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையில் அந்த நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமடைந்து உள்ளனர்.
இதனால் நடைபாதை மூடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் ரேஷன் கடையை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இருப்பினும் நேற்று ரேஷன் கடையை திறக்க முடியவில்லை. திறந்தால் கட்டிடம் மேலும் இடிய வாய்ப்பு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டது.