ஊட்டியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

குளு, குளு காலநிலையை அனுபவிக்க ஊட்டியில் குவிந்த பயணிகளால் சுற்றுலா தலங்கள் களைகட்டின. அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2022-03-26 14:08 GMT
ஊட்டி

குளு, குளு காலநிலையை அனுபவிக்க ஊட்டியில் குவிந்த பயணிகளால் சுற்றுலா தலங்கள் களைகட்டின. அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

குளு, குளு காலநிலை

சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. வார விடுமுறை நாளான இன்று வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் பெரணி செடிகள், அலங்கார செடிகள், கள்ளி செடிகள் போன்றவற்றை பார்வையிட்டனர். அலங்கார வேலிகள், பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். பூங்காவுக்கு முன்பு நீலகிரியில் விளையும் பழங்கள், காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கினர். மேலும் வாடா மல்லி மலர்களை வாங்கி சென்றனர்.

களைகட்டியது

படகு இல்லத்தில் வழக்கத்தைவிட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மோட்டார் படகுகளில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அலங்கார செடிகளால் ஆன செல்பி ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படகு இல்ல சாலையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு இல்ல வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் சுற்றுலா வாகனங்களால் நிரம்பியது. அரசு தாவரவியல் பூங்காவுக்கு தினமும் 4,500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை நாட்களில் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் கோடை சீசன் தொடங்கும் முன்பே சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், அதனை நம்பி பிழைப்பு நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பைன்பாரஸ்ட் சுற்றுலா தலத்தில் காமராஜ் சாகர் அணை பின்னணியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தனர். மேலும் கரையோரம் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இது மட்டுமின்றி சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வந்ததால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்