தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம்

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2022-03-26 14:03 GMT
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பங்குனி திருவிழா
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதி கோவில்களில் 7-வது திருப்பதியுமாக தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவர் மகரநெடுங்குழைக்காதர். இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நிகரில் முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி மற்றும் ரதவீதிகளில் உலா வருதலும், 5-ம் திருநாளான கடந்த 22-ந் தேதி கருடசேவையும் நடைபெற்றது.

தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலை 7.30 மணிக்கு உற்சவர் நிகரில் முகில் வண்ணன் தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 9 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கீழ ரதவீதியில் புறப்பட்ட தேர் தெற்கு ரத வீதி வழியாக, மேல ரத வீதியில் வந்த போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் தேர் நிறுத்தப்பட்டது.
பின்னர் மாலை 4 மணிக்கு இழுக்கப்பட்ட தேர் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வந்து நிலையத்தை வந்தடைந்தது. விழாவில் கோவில் தக்கார் அஜித், நிர்வாக அதிகாரி இசக்கியப்பன், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்