உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வெற்றி துணை தலைவர் பதவியையும் கைப்பற்றியது
உதயேந்திரம் பேரூராட்சி தலைவராக தி.மு.க. சேர்ந்த பூசாராணி வெற்றி பெற்றார். துணை தலைவர் பதவியையும் தி.மு.க.கைப்பற்றியது.;
வாணியம்பாடி
உதயேந்திரம் பேரூராட்சி தலைவராக தி.மு.க. சேர்ந்த பூசாராணி வெற்றி பெற்றார். துணை தலைவர் பதவியையும் தி.மு.க.கைப்பற்றியது.
மறைமுக தேர்தல்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.8 வார்டுகளிலும், அ.தி.மு.க.6 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் என மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் தேர்வு பெற்றனர்.
கடந்த 4-ம் தேதி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றபோது 3-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மகேஸ்வரி அ.தி.மு.க. ஆதரவுடன் தலைவர் பதவிக்கு மனு கொடுத்ததால் 2 கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க.வெற்றி
இந்த நிலையில் நேற்று மீண்டும் காலை 11 மணிக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் பேரூராட்சியின் 8-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பூசாராணியும், அ.தி.மு.க.சார்பில் 15-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுகன்யாவும் மனு செய்திருந்தார். இதில் பூசாராணி 8 வாக்குகளை பெற்று தலைவராக வெற்றி பெற்றார். சுகன்யாவுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மறைமுக தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 மீட்டர் முன்னதாகவே தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
துணை தலைவர் தேர்தல்
இதேபோல் பிற்பகல் 3 மணிக்கு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.கோவிந்தராஜும், அ.தி.மு.க. சார்பில் லில்லியும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ் 8 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லில்லி 7 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் கோவிந்தராஜ் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமி அறிவித்தார்.
வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் கட்சியினருடன் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளரான தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் கைலாசகிரி ரோட்டில் உள்ள தி.மு.க.அலுவலகத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதில் ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார், பேரூராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. புதிய நிர்வாகிகளுக்கு பிரமுகர்கள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.