கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ 105 ஆதார விலையாக நிர்ணயம்

கொப்பரை கிலோவுக்கு ரூ.105 ஆதார விலையாக நிர்ணயம் செய்து அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதாக விழிப்புணர்வு கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-03-26 13:47 GMT
பொள்ளாச்சி

கொப்பரை கிலோவுக்கு ரூ.105 ஆதார விலையாக நிர்ணயம் செய்து அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதாக விழிப்புணர்வு கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். 

விழிப்புணர்வு கூட்டம்

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திகு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கொப்பரை கொள்முதல், உணவு பதப்படுத்துதல் திட்டம் மற்றும் வேளாண் கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று கொண்டேகவுண்டன்பாளையத்திலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொப்பரை தேங்காய்

வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைந்து உள்ளது. இதன் காரணமாக கொப்பரைக்கு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க அரசு கிலோவுக்கு ரூ.105.90 ஆதார விலை நிர்ணயம் செய்து உள்ளது. நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு சிட்டா, அடங்கல் கொடுத்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து சுழற்சி முறையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடம் இருந்து அதிகபட்சமாக 2500 கிலோ அல்லது ஒரு ஏக்கருக்கு 216 கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் உணவு பதப்படுத்துதல் திட்டத்தில் புதிதாக தென்னை சார்ந்த உணவு பொருட்களுக்கு மட்டும் தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி தேங்காய் எண்ணெய், பவுடர் மற்றும் தென்னை சார்ந்த உணவு பொருட்கள் தயாரிக்க தொழிற்கூடம் மற்றும் எந்திரம் வாங்குவதற்கு அரசு 35 மானியமும், 55 சதவீதம் வங்கி கடனுதவியும், 10 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பு இருக்க வேண்டும். இதற்கான உதவிகளும், ஆலோசனையும் வேளாண்மை துறை மூலம் அளிக்கப்படும். வேளாண்மை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகங்களுக்கு சென்று கேட்டு தெரிந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்