சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்காக நிலம் அளவீடு செய்யும் பணி மீண்டும் தொடக்கம்
சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் அளவீடு செய்யும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.;
ஓமலூர்:
சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் அளவீடு செய்யும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
விமான நிலையம்
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்துக்குட்பட்ட காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் விமான சேவை நடைபெற்று வந்தது. ஒப்பந்த காலம் முடிந்ததால் விமான சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அதனை சுற்றியுள்ள காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிகளில் சுமார் 590 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய நில அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் தொடக்கம்
அதன்படி அங்குள்ள வீடுகள், தென்னை மரங்கள் மற்றும் அந்த நிலங்களில் உள்ள அப்போதைய நிலவரங்கள் குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் விரிவாக்க பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் நில அளவீடு செய்யும் பணி சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூர் பகுதியில் தொடங்கியது சேலம் விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் சீனிவாசன் மேற்பார்வையில் தனி வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், தென்னரசு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சண்முகவள்ளி, கார்த்திக், பிரபு, நில அளவை பிரிவு தனி சார் ஆய்வாளர் ரேவதி செந்தில்குமார், தோட்டக்கலை துறை அலுவலர் ராஜேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அச்சம்
இவர்கள் நில அளவு, கிணறு, போர்வெல், விவசாய நிலங்களில் உள்ள தென்னை, வேம்பு, தேக்கு, வீடு மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை தனித்தனியாக கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் இருந்த விரிவாக்க பணி தற்போது மீண்டும் தொடங்கி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.