சாய்வு தளத்தில் பாசி படர்ந்ததால் நீச்சல் குளத்தில் இறங்க சிரமப்பட்ட நெல்லையப்பர் கோவில் யானை சீரமைப்பு பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை

நெல்லையப்பர் கோவிலில் உள்ள நீச்சல் குளத்தின் சாய்வு தளத்தில் பாசி படர்ந்ததால் யானை உள்ளே இறங்க சிரமப்பட்டது

Update: 2022-03-25 22:48 GMT
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் உள்ள நீச்சல் குளத்தின் சாய்வு தளத்தில் பாசி படர்ந்ததால் யானை உள்ளே இறங்க சிரமப்பட்டது. இதையடுத்து சாய்வு தளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நீச்சல் குளம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ‘காந்திமதி’ என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளித்து வந்தது. மேலும் கோவில் வளாகத்தில் யானை பராமரிக்கப்படும் பகுதியில் ‘ஷவர்’ அமைக்கப்பட்டு, அதிலும் யானையை பாகன்கள் குளிப்பாட்டினர். 
இந்த நிலையில் யானை தண்ணீரில் மூழ்கி குளிக்க வசதியாக கோவில் வளாகத்திலேயே நீச்சல் குளம் கட்டப்பட்டது. அதாவது சுவாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் நடுவே உள்ள வசந்த மண்டபத்தில் ரூ.10 லட்சத்தில் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டது. அது 26 அடி நீளத்தில், 22 அடி அகலத்தில் 1½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. அந்த நீச்சல் குளத்துக்குள் யானை இறங்கிவிட்டு வெளியே வருவதற்கு வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்பட்டது. தண்ணீர் இல்லாதபோது அதில் யானையை உள்ளே இறங்க செய்து, மீண்டும் மேலே ஏறச்செய்து சோதனை நடத்தப்பட்டது.
பாசி படர்ந்தது
இந்த நிலையில் கோவில் வளாகத்தில் 3 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து தண்ணீர் எடுத்து நீச்சல் குளம் நிரப்பப்பட்டது. இதையடுத்து நீச்சல் குளத்தில் யானை சோதனை முறையில் உள்ளே இறக்கப்பட்டு, ஆனந்தமாக குளித்து வந்தது. 
சமீபத்தில் யானை உள்ளே இறங்கியபோது, சாய்வு தளத்தில் பாசி படர்ந்திருந்ததால் கால் சறுக்கியது. இதனால் யானை நீச்சல் குளத்துக்குள் சென்று வர சிரமப்பட்டது. இதுகுறித்து பாகன்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சீரமைக்க நடவடிக்கை
இதையடுத்து சாய்வு தளத்தில் யானை செல்லும்போது, கால்கள் சறுக்காத வகையில், அதை சீரமைத்து உரிய அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் யானை தினமும் நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்