சங்ககிரி அருகே வாகன சோதனையில் பிரபல திருடன் கைது
சங்ககிரி அருகே நடந்த வாகன சோதனையில் பிரபல திருடன் கைது செய்யப்பட்டான். கார், 7 பவுன் நகை, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சங்ககிரி:
சங்ககிரி அருகே நடந்த வாகன சோதனையில் பிரபல திருடன் கைது செய்யப்பட்டான். கார், 7 பவுன் நகை, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருட்டு
சங்ககிரி அருகே வைகுந்தம் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 41). ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இந்த கடையின் பூட்டை உடைத்து ரூ.29 ஆயிரம் மற்றும் பிரிண்டர் எந்திரம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக சங்ககிரி போலீசில் அவர் புகார் செய்தார்.
சங்ககிரி கிருஷ்ணா நகரை சேர்ந்த காண்டிராக்டர் அன்பழகன் (62) என்பவர் வீட்டில் 9 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனதாக சங்ககிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
வாகன சோதனை
மேலும் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் வைகுந்தம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் இருந்து சங்ககிரி வழியாக சேலம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கார் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதன் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த பட்டறை சுரேஷ் (33) என்கிற சுரேஷ் என்பது தெரியவந்தது. இவர் முத்துகிருஷ்ணன், அன்பழகன் வீடு, கடைகளில் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் கார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் 7 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், சிலிண்டர் எந்திரம் உள்ளிட்டவற்றை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுரேசின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.