கடையத்தில் யூனியன் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

யூனியன் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

Update: 2022-03-25 22:12 GMT
கடையம்:
கடையம் யூனியன் கவுன்சிலர்கள் பதவி ஏற்று 5 மாதம் ஆன நிலையில் 2-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவி செல்லம்மாள் முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகேஷ் மாயவன், மாவட்ட கவுன்சிலர் சுதா, மைதீன் பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 62 தீர்மானங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் 62-வது தீர்மானமாக 2020-2021-ம் ஆண்டு பொது நிதியில் ரூ.2 கோடியே 28 லட்சம் உள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு நடைபெற வேண்டிய பணிகளை தேர்வு செய்ய எழுதிக் கொடுக்குமாறு ஆணையாளர் திலகராஜ் கேட்டார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள், ‘வருகிற 29-ந்தேதி எழுதி தருகிறோம். அதன்பிறகு தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்’ என தெரிவித்தனர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புளி கணேசன், மணிகண்டன், மாரியம்மாள், தங்கம் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘கடந்த 5 மாதங்களில் இதுவரை பொது நிதியில் எந்த பணியும் நடக்கவில்லை. மக்கள் பணிக்கான தீர்மானத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்