பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது கடத்தல்: பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பிளஸ்-2 மாணவியை பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது கடத்தி, தாலி கட்டி, கட்டாய பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-03-25 22:06 GMT
ஈரோடு
பிளஸ்-2 மாணவியை பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது கடத்தி, தாலி கட்டி, கட்டாய பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம்
ஈரோடு கருங்கல்பாளையம் ஜெகன்வீதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் இறந்து விட்டார். அவரது மகன் அஜீத்குமார் (வயது 22). இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
அஜீத்குமார் கடந்த 2018-ம் ஆண்டு கருங்கல்பாளையம் பழக்கார தெரு பள்ளிவாசல் பகுதியில் வைத்து மாணவி ஒருவரை சந்தித்தார். அந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூடம் வந்து செல்ல அவர் பழக்கார பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வருவது உண்டு. அவரை அஜீத்குமார் பின்தொடர்ந்து பல நாட்களாக பழகி வந்தார். பின்னர் தொலைபேசி மூலமாகவும் 2 பேரும் பேசி பழகி உள்ளனர்.
அத்துமீறல்
இந்த நிலையில் கடந்த 7-11-2018 அன்று அஜீத்குமார் மாணவியை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வெளியே வருமாறு கூறி உள்ளார். அன்று தீபாவளி என்பதால் வீதியே பரபரப்பாக இருந்தநேரத்தில், அங்கு வந்த அஜீத்குமார் மாணவியை ஜெகன்வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.
அப்போது அஜீத்குமாரின் தாயார் வீட்டில் இல்லை. அந்த தனிமையை பயன்படுத்தி, அஜீத்குமார் அத்துமீறி மாணவியை பாலியல் சீண்டல்கள் செய்தார். மாணவி அவருக்கு ஒத்துழைக்க மறுத்தார். ஆனால், ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அவரது வீட்டிலேயே விட்டு விட்டு சென்று விட்டார்.
கடத்தல்
இந்த நிலையில் கடந்த 7-6-2019 அன்று மாலை 5.30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை அஜீத்குமார் திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றார். 2 பேரும் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம், விஜயபுரம் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். பின்னர் 12-6-2019 அன்று அங்குள்ள ஒரு முருகன்கோவிலில் வைத்து அஜீத்குமார் சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார். பின்னர் திருமணம் நடந்ததை காரணம் காட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கிடையே மாணவியை காணவில்லை என்று தாயார் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மீட்பு
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடியபோது, சிறுமி விஜயபுரத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். 30-6-2019 அன்று மாணவியை போலீசார் மீட்டனர். அவருடன் இருந்த அஜீத்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது, கட்டாய தாலி கட்டியது ஆகிய குற்றங்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
20 ஆண்டு ஜெயில்
மேலும் இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச்சென்ற குற்றத்துக்காக அஜீத்குமாருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆர்.மாலதி கூறி இருந்தார். எனவே அஜீத்குமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில், ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்