மதமாற்ற தடை சட்ட மசோதா தொடர்பாக கர்நாடக சட்டசபையில் ஆளும் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்-குழப்பம்
மதமாற்ற தடை சட்ட மசோதா தொடர்பாக கர்நாடக சட்டசபையில் ஆளும் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர்
பெங்களூரு: மதமாற்ற தடை சட்ட மசோதா தொடர்பாக கர்நாடக சட்டசபையில் ஆளும் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர்.
ரூ.200 கோடி
கர்நாடக சட்டசபையில் நேற்று பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் நியமன உறுப்பினர் வினிஷா நீரோ பேசும்போது கூறியதாவது:-
நான் கடந்த 9 ஆண்டுகளாக இந்த சபையின் உறுப்பினராக உள்ளேன். மாநிலங்களவையில் ஆங்கிலோ-இந்தியன் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
சட்டவிரோதமானது அந்த நிதி ஒதுக்கீடு தற்போதைய பட்ஜெட்டில் ரூ.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பதாக அரசு சொல்கிறது. அதே போல் பிற மதங்களின் நூல்களில் உள்ள நீதி போதனைகளையும் சேர்க்க வேண்டும். பெங்களூருவில் தனியார் பள்ளிகள் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு வரி விதித்தால், அந்த வரி மாணவர்களிடம் தான் பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்கும். அதனால் மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வினிஷா நீரோ பேசினார்.
அவர் பேசும்போது பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ் குறுக்கிட்டு, ‘சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். இதை சட்டவிரோதம் என்று எப்படி கூற முடியும். இதை நான் எதிர்க்கிறேன். அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்றார்.
கூச்சல்-குழப்பம்
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரியங்க் கார்கே, அஞ்சலி நிம்பால்கர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரியங்க் கார்கே பேசும்போது, ‘சட்ட மசோதாவுக்கு எதிராக பேசக்கூடாதா?. சட்டவிரோதம் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. அதை எதற்காக சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அரசின் சட்ட மசோதாக்களை விமர்சிக்கக்கூடாதா?. கருத்துரிமை இல்லையா? என்றார்.
அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து பேசினர். இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் குரலை உயர்த்தி பேசியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய உறுப்பினர் வினிஷா நீரோ, தான் மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டவிரோதம் என்று கூறவில்லை என்றும், உறுப்பினர் ராஜீவ் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்றும் கூறினார்.